Skip to main content

காவிரி நதி நீர் விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Cauvery water issue Tamil Nadu government action decision

 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அப்போது காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் திறப்பது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு பிறப்பித்திருந்த பரிந்துரையைக் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதன்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி காலை முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

 

இந்நிலையில் டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என முறையிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் காவிரி ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு செப்டம்பர் 12 ஆம் தேதி வரை வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த 4 நாட்களாக காவிரியில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. எனவே காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாக கர்நாடகா மீது காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தமிழக அரசு புகார் அளிக்க முடிவு செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்