தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தண்ணீரின்றி மக்கள் தவிக்கின்றனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தண்ணீரின்றி மக்கள் தவிக்கின்றனர். நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யச்சொல்கிறது, ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மக்கள் பாதிக்கப்பட்ட பின்பே பல தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுப்ப தமிழக அரசு தூக்கத்தில் இருந்து எழுந்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து வேலூர் மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்போம் என அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையில் எங்கு தண்ணீர் உள்ளது என்கிற கேள்விக்கு தமிழகரசு சரியான பதில் சொல்லவில்லை. வேலூர் மாவட்டத்துக்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக தினமும் குடிதண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரில் உபரி நீரை தான் சென்னைக்கு ரயில்வே வேகன் மூலம் கொண்டு செல்லவுள்ளோம் என்றார்கள். வேலூர் மாவட்டத்துக்கு போதுமான தண்ணீர் வருகிறதா என்ற கேள்விக்கு அரசிடம் முறையான பதிலில்லை. இது வேலூர் மாவட்ட மக்களிடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதைப்பற்றி கவலைப்படாமல் தண்ணீரை கொண்டு செல்லும் பணியில் தமிழகரசு ஈடுப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் காவிரி நீரை சேமித்து வைத்து அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அனுப்பும் தரைத்தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் இருந்து ஜோலார்பேட்டை இரயில்வே முனையத்தின் அருகில் பார்சாம்பேட்டை இரயில்வே கேட் வரையிலான 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராட்சச பைப் லைன் அமைத்து கொண்டு வந்து ரயில்வேக்கு சொந்தமான மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீரை நிரப்பி அதிலிருந்து ரயில்வே வேகனில் நிரப்பி சென்னை வில்லிவாக்கம் ரயில்வே தண்ணீர் தொட்டியில் நிரப்பி அங்கிருந்து மாநகரத்தின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் பணியினை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் ஜீன் 26ந்தேதி முதல் நடைபெற துவங்கின. அந்த பணிகள் ஜீலை 9ந்தேதியான இன்று முடிந்தது. ஜீலை 9ந்தேதி மாலை சோதனை ஓட்டம் நடைபெறுவதாக இருந்தது. சில தடங்கள்களால் நள்ளிரவில் சோதனை ஓட்டம் நடைபெறும் எனக்கூறப்படுகிறது.
ஜீலை 11ந்தேதி முதல் சென்னை மக்கள் காவிரி நீரை குடிக்கவுள்ளனர். தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீரை ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு செல்லவுள்ளனர். இதற்காக 50 பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில் வேகன்கள் தயார் நிலையில் உள்ளன. ஒருமுறைக்கு 25 லட்சம் லிட்டர் பயணமாகப்போகிறது. ஒரு லிட்டர் தண்ணீரை கொண்டு செல்ல ரயில்வேவுக்கு தமிழகரசு 34 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம். அதாவது ஒருமுறை ஒரு வேகன் தண்ணீரை கொண்டு செல்கிறது என்றால் அதற்கான கட்டணம் 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.