மேட்டூர் அணை தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறுகிறது. இதனால் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இவ்வாண்டு ஜீன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அவ்வாறு திறக்கப்பட்ட நீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இந்தச் சூழலில் வினாடிக்கு 3,000 கன அடி என்ற அளவில் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீர் இன்று (15.06.2021) அதிகாலை மூன்று மணிக்குத் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்தது.
தற்போது சுமார் 1,800 கன அடி நீர் திருச்சி மாநகர எல்லையான கம்பரசம்பேட்டை வந்தடைந்த காவிரி நீர், இன்று மாலை அல்லது இரவுக்குள் கல்லணையைச் சென்றடையும் என ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்ததையடுத்து விவசாயிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது. நீரை வரவேற்கும் விதமாக விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முக்கொம்புவில் திறக்கப்படும் தண்ணீர் நாளை கல்லணையிலிருந்து டெல்டா பாசன விவசாயத்திற்குத் திறந்துவிடப்படுகிறது.