கரோனா ஊரடங்கு விதிகள் கடுமையாக இருந்தபோது குறைந்த எண்ணிக்கையிலான காய்கறி கடைகளே இருந்தன. வாகனங்களில் விளை பொருள்களைக் கொண்டு செல்ல தடைகள் தளர்த்தப்பட்டு இருந்த போதிலும், சந்தைக்கு காய்கறி வரத்து குறைவாகவே இருந்தன. அதனால் சாதாரண நாள்களில் 40 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், கேரட் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகள் கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரித்தது.
இந்நிலையில், ஊரடங்கு விதிகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்க நேர நீட்டிப்பும் வழங்கப்பட்டது.
தற்போது சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பல காய்கறிகள் விலை சரியத் தொடங்கி உள்ளன. குறிப்பாக, காலி பிளவர் விலை அதலபாதாளத்திற்கு வீழ்ச்சி அடைந்தது.
சேலத்தில் ஆற்றோரம் பகுதியில் இயங்கி வந்த காய்கறி சந்தை, கரோனா ஊரடங்கால் பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சந்தைக்கு சேலம் மாவட்டம் வீராணம், அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர், ஓமலூர், இடைப்பாடி, மேட்டூர் சுற்றுவட்டாரங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூருவில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், பெங்களூருவில் இருந்து அதிகளவில் காலி பிளவர் காய்கறி வந்திறங்கியது. வரத்து அதிகரிப்பால் காலி பிளவர் சிறியது 5 ரூபாய்க்கும், பெரியது 10 ரூபாய்க்கும் கூவிக் கூவி விற்றனர். சில விவசாயிகள் மூன்று காலி பிளவர் 20 ரூபாய்க்கு கூர் கட்டியும் விற்பனை செய்தனர்.
அதேநேரம், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு வரை காலி பிளவர் 15 முதல் 30 ரூபாய் வரை விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். அதேநேரம், விலை குறைந்ததால் பொதுமக்கள் போட்டிப்போட்டு காலி பிளவர் காய்கறியை வாங்கிச் சென்றனர்.