கோவை மாவட்டம், அன்னூர் ஒற்றர்பாளையம் கிராம அலுவலகத்தில் வி.ஏ.ஓ.வாக பணியாற்றிவருபவர் கலைச்செல்வி. இந்த அலுவகலத்தில் உதவியாளராக பணியாற்றிவருபவர் முத்துசாமி. அதே ஊரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், தனது சொத்து விபரங்களைச் சரிபார்ப்பதற்காக கிராம அலுவலகத்திற்கு வந்தார். அப்போது வி.ஏ.ஓ. கலைச்செல்வி, “கோபிநாத், உங்களுடைய ஆவணங்களில் சரியான ஆவணங்கள் இல்லை. முறையான ஆவணங்களைக் கொண்டு வாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.
அப்போது கோபிநாத் கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தகராறும் செய்தார். அப்போது தண்டல்காரர் முத்துசாமி குறுக்கிட்டு, “அரசு அலுவலர்களிடம் தவறாகப் பேச வேண்டாம்” என்று கூறி சமாதானப்படுத்த முயற்சி செய்தார். இதையடுத்து கோபிநாத், முத்துசாமியின் சாதியைச் சொல்லி திட்டியதோடு, “பொய்யாய் புகார் அளித்து பணியிலிருந்து தூக்கிவிடுவேன்” என்று மிரட்டியிருக்கிறார்.
இதையடுத்து தண்டல்காரர் முத்துசாமி, கோபிநாத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதை அந்த அலுவலகத்தில் இருந்த ஒருவர், யாருக்கும் தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாக, அதிர்ச்சியடைந்த முற்போக்கு இயக்கங்கள், போராட்டக் களத்தில் இறங்கியிருக்கின்றன.