நாங்கள் தொடுத்த வழக்கு இன்று வரை இந்த ஆட்சியை கலைக்காமல் காப்பாற்றி வருகிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,
8 வழிச்சாலையை பொதுமக்கள் யாரும் கேட்கவில்லை. விவசாய நிலங்கள் மீது போடப்படும் சாலையை பொதுமக்கள் எதிர்க்கின்றனர். பொதுமக்களின் கருத்துக்கேட்டு இந்த சாலையை அமைக்க வேண்டும். பொதுமக்களை துன்புறுத்தி நிலங்களை பெறுகிறது அரசாங்கம். இதற்காக குரல் கொடுத்த மன்சூர் அலிகான், பியூஷ்மனுஷ், கல்லூரி மாணவி என எடப்பாடி அரசாங்கம் கைது செய்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
நாங்கள் தொடுத்த வழக்கு இன்று வரை இந்த ஆட்சியை கலைக்காமல் காப்பாற்றி வருகிறது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையில்லாத இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் தீர்ப்பு வரும்வரை தான்.
சட்டமன்றத்தில் என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கக்கூட அனுமதிப்பதில்லை சபாநாயகர். முதல்வர் இருமினால் தான் பேச நினைக்கும் உறுப்பினர்களுக்கு அனுமதிக்கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். அங்கு இப்படி சபாநாயகர் நடந்துக்கொண்டதில்லை.
30 ஏக்கர் நிலம் மருத்துவமனை ஒன்றுக்கு வழங்கப்பட்டதாக மீடியாக்கள் வழியாகத்தான் செய்திகளை கண்டேன். சட்டத்துக்கு புறம்பாக வழங்கப்பட்டதாக எதிர்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். அப்படி நடந்திருந்தால் விசாரணை நடத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.