
சமூக வலைதளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய, தனி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கை, அக்டோபர் 14-ஆம் தேதி விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் கந்த சஷ்டி விவகாரம், வனிதா விஜயகுமார் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறிவந்த நிலையில், சமூக வலைதளங்கள், இணையதளங்கள், ஓ.டி.டி தளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய, தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர், கடந்த ஜூலை மாதம் பொது நல மனு, தாக்கல் செய்திருந்தார்.
அதில், கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும், தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், வூட், சோனி லைவ், எம்.எக்ஸ். பிளேயர், ஜீ பைவ் ஆகிய ஓ.டி.டி தளங்களிலும், இப் ஹைண்ட்வுய்ட்ஸ், கலாட்டா டாட் காம், சினி உலகம், இந்தியா கிளிட்ஸ் ஆகிய இணையதளங்களிலும், எவ்வித தணிக்கையும் இல்லாமல் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும், சினிமாவை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் எவ்வித தணிக்கையும் இல்லாமல், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். திரைப்படங்களைத் தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப் போல, சமூக வலைதளங்களைத் தணிக்கை செய்யவும், தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். வீடியோக்களை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய - மாநில அரசுகளுக்கும், எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள சமூக வலைதளங்கள், ஓ.டி.டி தளங்கள், சினிமா இணையதளங்கள் ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்களுக்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முன்வைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, தனி தணிக்கை வாரியம் அமைக்கக்கோரிய வழக்கின் மீதான விசாரணை அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளனர்.