Skip to main content

சீமான் மீது வழக்குப் பதிவு

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

n

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அருந்ததியினர் குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக ஒரு பிரிவினர் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு தடைவிதிக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

இதேபோல் நாம் தமிழர் கட்சி கடந்த 20 ஆம் தேதி உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், அதனை மீறி ஆலமரத் தெருவில் பரப்புரை மேற்கொண்டதாகத் தேர்தல் பறக்கும் படையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைப் பெற்ற ஈரோடு தெற்கு காவல்துறையினர் 171F என்ற பிரிவின் கீழ் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர், “திமுக, அதிமுக கட்சிகள் பரிசு, பணம், இறைச்சி என வாரிக் கொடுத்து வரும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் எளிய முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது” என்கிற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்