
சேலத்தில், காவல்துறையினர் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் குறிித்து ஆத்தூர் நீதித்துறை நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45), விவசாயி. இவரும், இவருடைய நண்பர்கள் சிவன்பாபு, ஜெயசங்கர் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் ஜூன் 22ஆம் தேதி மாலை, பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி வழியாகச் சென்றனர்.
அப்போது மூவரும் மது போதையில் இருந்தனர். இந்த சோதனைச்சாவடியில் வனத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி ஏத்தாப்பூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. பெரியசாமி உள்ளிட்ட சில காவலர்களும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினர் அவர்களுடைய வாகனத்தை சோதனையிட முயன்றபோது, முருகேசன் அவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த சிறப்பு எஸ்.ஐ. பெரியசாமி, திடீரென்று முருகேசனை மூங்கில் பிரம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்தார் முருகேசன். இதில் அவருக்குப் பின்பக்க தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகேசனை, மேல் சிகிச்சைக்காக ஜூன் 23ஆம் தேதி அதிகாலையில் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்தச் சம்பவம் பொதுவெளியில் மட்டுமின்றி, அரசியல் தளத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சிறப்பு எஸ்.ஐ. பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரை சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் பணியிடைநீக்கமும் செய்தார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. மட்டுமின்றி சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரியும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். உயிரிழந்த முருகேசனின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கைதான எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி ஆத்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல்துறையினர் பாதுகாப்பில் இருக்கும் ஒருவர் இறக்க நேரிட்டால், சி.ஆர்.பி.சி. சட்டப்பிரிவு 176இன் கீழ் மாஜிஸ்ட்ரேட் மூலம் நேரடியாக விசாரிக்கப்பட வேண்டும். அதன்படி, இந்தச் சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ஆத்தூர் நீதித்துறை நீதிமன்ற நடுவர் ரங்கராஜ், பாதிக்கப்பட்ட முருகேசனின் குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தின்போது முருகேசனுடன் வந்திருந்த அவருடைய நண்பர்கள், சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர், வனத்துறையினர் ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகிறார். தவிர, காவல்துறை தரப்பில் ஆத்தூர் டி.எஸ்.பி. இமானுவேல் ஞானசேகரன், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரியிடம் கேட்டபோது, ''முதற்கட்ட தகவலின்பேரில் ஏத்தாப்பூர் எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி மீது கொலை வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடந்துவருகிறது. காவல்துறை தரப்பில் ஆத்தூர் டி.எஸ்.பி.யை விசாரணை அதிகாரியாக நியமித்திருக்கிறோம். இருதரப்பு விசாரணை அறிக்கையும் வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி, சேலம் மாநகரக் காவல்துறையில் புகைப்படக்காரராக 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு வெடிகுண்டு தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, கடைசியாக அவர் சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் அவர் சேலம் மாநகரக் காவல்துறையில் இருந்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்கு மாறுதலில் சென்றுள்ளார்.
இதுவரையிலான பணிக்காலத்தில் பெரியசாமியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது?, பணிக்காலத்தில் அவர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.