சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்து நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அருகிலுள்ள பொறியியல் கல்லூரி விடுதிகளில் சிறப்பு வார்டுகள் கூடுதலாக அமைக்கப்பட்டு அங்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அம்மாபேட்டையைச் சேர்ந்த 43 வயது கரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் சம்பவத்தன்று டாஸ்மாக் மது குடித்து விட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரின் செயல்பாடுகள் அங்கு சிகிச்சை பெற்றுவந்த மற்ற நோயாளிகளுக்கு பெரும் தொல்லையாக இருந்தது.
இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல் துறையில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போதையில் ஈடுபட்ட அந்த கரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த நோயாளிக்கு அவருடைய மனைவி தினசரி உணவு எடுத்து வரும்போது அதில் டாஸ்மாக் மதுவை மறைத்து வைத்துக் கொடுத்து விட்டு செல்வது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த நோயாளியின் 38 வயது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அண்ணாமலை நகர் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.