நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் மற்றும் அவரது மருமகன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பக்கத்தில் இருந்த தனது 8 கிரவுண்ட் நிலத்தை அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அபகரித்துக் கொண்டதாக மகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் அடிப்படையில், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதி திட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. தங்கள் மீதான வழக்கை ரத்துச் செய்யக்கோரி ஜெயக்குமாரும், அவரது மகள் மற்றும் மருமகனும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள், மருமகன் ஆகியோர் மீதான வழக்கை ரத்துச் செய்து உத்தரவிட்டார்.