அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். மேலும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிக்கையில் இணைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை 10:30 மணி அளவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.