தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர். இதனையடுத்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனநாயக ரீதியில், தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் வேலையில் இறங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அதிமுக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒரு சில தொலைக்காட்சிகள் மீது பொய் வழக்குகள் புனைவதும், கடந்த 30 மாத தி.மு.க. ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணையக் குழு முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர். நடராஜ் மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது, திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக் காட்டுகிறது. காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி சேனல் தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.