வேளச்சேரியில் மூடப்பட்ட கிருஷ்ணா நுழைவுவாயிலைத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு, 4 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க, சென்னை ஐ.ஐ.டி.-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி வளாகத்திற்கு வேளச்சேரியிலிருந்து வந்துசெல்பவர்கள் பயன்படுத்துவதற்காக கிருஷ்ணா நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நுழைவுவாயிலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடி, ஐ.ஐ.டி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நுழைவுவாயில் மூடப்பட்டதால், ஐஐடி-க்கு வந்து செல்பவர்களும், அங்கு அமைந்துள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு வந்துசெல்லும் மாணவர்களும் சிரமத்திற்குள்ளாவதால், வேளச்சேரி பக்கம் உள்ள கிருஷ்ணா நுழைவுவாயிலைத் திறக்க ஐ.ஐ.டி.-க்கு உத்தரவிடக்கோரி, ஹரிகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஐ.டி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த நுழைவாயில் அருகில் மாணவிகள் விடுதி இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு கருதியே, அந்த நுழைவுவாயில் மூடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நுழைவுவாயிலைத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து தென் சென்னை எம்.பி மற்றும் மனுதாரர் ஆகியோர், குடியரசுத் தலைவருக்கும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்குக்கும் மட்டுமே மனு அனுப்பியுள்ளனரே தவிர, சென்னை ஐ.ஐ.டி.-க்கு அனுப்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினர். அதனால் மனுதாரர், இரண்டு வாரத்தில் சென்னை ஐ.ஐ.டி.-க்கு புதிதாக மனு அனுப்ப வேண்டுமென்றும், அதன் மீது ஐ.ஐ.டி நிர்வாகம் 4 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.