Skip to main content

வன்னியர்களுக்கான 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... இன்று விசாரணை

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

The case against the 10.5 per cent internal allocation.... is being heard today

 

கடந்தவாரம் நடைபெற்று முடிந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. வன்னியர்களுக்கான இந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்தும், இடைக்கால தடை விதிக்கக் கோரியும் தேனி, உத்தமபாளையத்தைச் சேர்ந்த சமுகநீதி பேரவையின் மாநில பொறுப்பாளர் சின்னாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கில் இன்று (05.03.2021) விசாரணை நடைபெற இருக்கிறது. அந்த மனுவில், ‘தமிழகத்தில் 'குறும்பக் கவுண்டர்' என்ற பிரிவினர் 30 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள இந்தச் சமூகத்தினர் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகங்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டை 108 சமூகத்தினர் பங்கிட்டுக்கொள்வதால், அந்தக் குறிப்பிட்ட சமூகத்திற்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 2020 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து, சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த ஆணையம் அறிக்கை அளிப்பதற்கு முன்பாகவே தேர்தலைக் கருத்தில்கொண்டு, கடந்த பிப். 28ஆம் தேதி சட்டமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியுள்ளது தமிழக அரசு. எனவே சாதி வாரியான கணக்கெடுப்பு முடிவு வரும் வரை வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறுத்திவைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்