'நிவர்' புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கன மழை பொழிந்து வரும் நிலையில், அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், ஆதனூர், கரசங்கால், வரதராஜபுரம், திருமுடிபாக்கத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்குச் செல்லுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக திருவள்ளூர்-ஆந்திரா சாலை மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டதால், ஆந்திரா - ஊத்துக்கோட்டை செல்லும் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மிக முக்கியமான பகுதியாக, வேளச்சேரி உள்ளது. இதற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னையில் கருதப்பட்டது வேளச்சேரியே. கடந்த, 2015 -இல் ஏற்பட்ட வெள்ளத்தின் பொழுது வேளச்சேரி அதிகபட்சமாக சேதமடைந்திருந்தது.
வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டிடங்களில் வசிப்போரின் வாகனங்கள், தரைதளத்தில் நிறுத்தப்பட்டு வரும் நிலையில், வெள்ளச் சேதத்தில் முதலில் பாதிப்பது கார் மற்றும் இருசக்கர வாகனங்களாகவே இருக்கும். தற்பொழுது ஏற்பட்டுள்ள புயல் காரணமாக, வேளச்சேரியில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி வருகிறது. இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடுகளில் வசிக்கக்கூடிய மக்கள், தங்களுடைய கார்களை நீரில் மூழ்கவிடாமல் தவிர்ப்பதற்காக, அருகில் உள்ள மேம்பாலத்தில், ஓரமாக நிறுத்தி பூட்டிவிட்டு வீடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
தற்பொழுது, வேளச்சேரி மேம்பாலத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி மட்டுமல்லாது சென்னையில் உள்ள பல்வேறு பாலங்களிலும், இதே போன்று பொதுமக்கள் தங்களது கார்களைப் பாதுகாக்க நிறுத்தி வருகின்றனர். இந்த வாகனங்கள் மேம்பாலத்தின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், எந்தவிதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படவில்லை.