கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி. இவர் கடந்த 5ஆம் தேதி தனது மனைவியுடன் நெய்வேலியில் இருந்து வேப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். திருப்பெயர் என்ற இடத்தின் அருகே சங்கிலி சென்ற காரின் மீது எதிரே வந்த கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கிய சங்கிலியை அருகில் இருந்தவர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். மற்றொரு காரில் நேரடியாக கொண்டு வந்து மோதி விபத்தை ஏற்படுத்திய அந்த நபர் திடீரென்று தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான காரை பரிசோதனை செய்தனர். அந்த காரில் இரண்டு லட்சம் மதிப்பிலான 30 மூட்டைகளில் அடைக்கப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அந்த மர்ம காரை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த அந்த மர்ம நபரை போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேப்பூர் 4ரோடு பகுதி சந்திப்பில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கே சந்தேகப்படும் அளவில் சென்று கொண்டிருந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தைச் சேர்ந்த கட் மட்சிங்(39) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் தான் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி கொண்டு வரும்போது சங்கிலி காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியவர் என்பதும் தெரியவந்தது. இவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கட் மட்சிங் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். விபத்தில் சிக்கிய காரில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தி வந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.