கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியான மழைக்குப் பின்பு, சம்பா சாகுபடிக்கான அறுவடைகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். அவ்வாறு அறுவடை செய்த நெல்மூட்டைகளை தனியார் அரிசி மில் உரிமையாளர்கள், வியாபாரிகள் விவசாய நிலங்களிலிருந்து நேரடியாக வாங்கி செல்கின்றனர்.
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா சட்டத்தின்படி, விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யும்போது, அதற்கான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் தற்போது அமலில் இருக்கும் நடைமுறைப்படி, விவசாயிகளிடமிருந்து நேரடியாக தனிநபர்களோ, வியாபாரிகளோ நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்துகொண்டு செல்லும்போது வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட விதிமுறைப்படி ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
அவ்வாறு விருத்தாச்சலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து வரி செலுத்தாமல், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளுக்கு 15-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் 100 டன்னுக்கு மேலாக கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகளை வேளாண் வாகன தணிக்கை குழுவினர் மறித்து சிறைப்பிடித்தனர். பின்னர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்திய பின்பு லாரிகள் அனுப்பப்பட்டன.