கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரிலுள்ள கந்தசாமி புரம் பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வி.கே.எஸ்.கார்டன் என்ற பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அந்த வீட்டில் இருந்த அப்துல் ஹக் மகன் அசேன் முகமதுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் கந்தசாமிபுரம் அண்ணாதுரை பகுதியில் வசித்து வரும் அவருடைய தாய் சாய்ராபானு என்பவரையும் போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வியாபாரத்திற்கு உடந்தையாக இருந்த இன்னொரு மகன் ஜாகிர் உசேன் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.