கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அந்த தேர்வானது ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
கிராம அஞ்சல் தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் எழுத முடியும் என மத்திய அரசு அஞ்சல் துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை அடுத்து இந்த தேர்விற்கு தடைக்கோரி மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த சனிக்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். இதனை அவசர வழக்காக ஏற்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நாளை (கடந்த 14 ஆம் தேதி) தேர்வினை நடத்தலாம் ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனையடுத்து அடுத்தநாளான ஞாயிற்று கிழமை தேர்வு நடைபெற்று முடிந்தது.
அஞ்சல் தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த பிரச்சனை தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் தற்போது நடந்து முடிந்த அஞ்சல் தேர்வு ரத்துசெய்யப்படுவதாக அறிவித்தார். இனி அஞ்சல் தேர்வுகள் எல்லாமே தமிழ் மாட்டுமில்லமால் அந்தந்த மாநிலங்களின் பிராந்திய மொழிகளிலுமே நடைபெறும் என அறிவித்தார்.