தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பதிவில் ‘திமுகவின் ஃபைல்கள்’ எனக் குறிப்பிட்டு ‘ஏப்ரல் 14, 2023 - காலை 10:15’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் பதிவிட்ட காணொளியில் திமுகவின் முக்கிய தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்டார். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன.
அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த ஊழல் பட்டியல் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''ஒரு பொய்யை மறைப்பதற்கு, ஒரு வெகுமதியை மறைப்பதற்கு, தான் வாங்கிய ஒரு லஞ்சத்தை மறைப்பதற்கு, 100 பொய்யை, ஆயிரம் பொய்களை சொல்ல ஆரம்பித்து விட்டார். ஒரே ஒரு வாட்ச்சுக்கு பில் இல்லை என ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே. ஒத்துக் கொள்வதற்கு என்ன வெட்கம்.
தேசிய கட்சியில் இருக்கிறோம் என்பதற்காக அடிப்படை ஆதாரமும் இல்லாமல், முகாந்திரமும் இல்லாமல் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு பத்திரிகையாளர் சந்திப்பை வைத்து அதற்கான நேரத்தை வீணடித்து ஒரு அரசின் மீது, அமைச்சர்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு என்ன முகாந்திரம். ஏதாவது ஒரு முகாந்திரம், ஒரு ஆதாரம் ஒரு அடையாளம், இதை நான் குறிப்பிட்டுச் சொல்லுகிறேன் என்று ஒன்று இருந்தால் சொல்லுங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன். மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நீங்கள் சொல்லும் நபர் குடியிருக்கும் வீட்டின் வாடகை. இந்த வாடகையை யார் கொடுக்கிறார்கள்? உங்களுடைய காருக்கு யார் டீசல் அடிக்கிறார்கள், சம்பளம் யார் கொடுக்கிறார்கள். மூன்றே முக்கால் லட்சம் ரூபாய் வீட்டு வாடகை கொடுக்கிற நபருக்கு மூன்று உதவி ஆட்கள் இருந்தால் போதுமா? அந்த வீட்டைப் பராமரிக்க எவ்வளவு பேர் வேலைக்கு வேண்டும். அவர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள்.
4 ஆடு மேய்த்தால் மூன்றே முக்கால் லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து குடியிருக்க முடியும். அப்படித்தான் இவர் சொல்லக்கூடிய கருத்துகள் இருக்கிறது. நீங்கள் தூய்மையாக இருந்தால் ஏன் அடுத்தவர்கள் சொத்தில் வாழ்கிறீர்கள். இது எப்படி தெரியுமா இருக்கிறது படையப்பா படத்தில் வருமில்ல ஒரு வசனம் ஞாபகம் இருக்கிறதா 'மாப்பிள அவர்தான்....' அது மாதிரி இருக்கு பயன்படுத்துவது எல்லாம் நான்தான் ஆனால் கொடுப்பதெல்லாம் அவங்க என்பதுபோல் பேசுவது அசிங்கமாக இல்லையா'' என்றார்.