சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வசந்த குமார் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி பட்டு தேவானந்தா அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாகச் சட்டக்கல்லூரி இயக்குநர் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக்கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 20 இணைப் பேராசிரியர்களின் பணியிடங்களில் 19 இணைப் பேராசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் உள்ள 206 உதவி பேராசிரியர்களின் பணியிடங்களில் 70 உதவி பேராசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, “இதன் மூலம் சட்டக்கல்லூரிகளில் உள்ள அனைத்து பணியிடங்களிலும் காலியாக உள்ளது என்பது தெரியவருகிறது. இத்தகைய பதில் மனு துரதிருஷ்டமானது. உதவி பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் இல்லாத சூழலில் சட்டக்கல்லூரி மாணவர்கள் எவ்வாறு பயில முடியும். எவ்வாறு மாணவர்களுக்குத் தரமான கல்வியைக் கொடுக்க முடியும்.
இத்தகைய செயல் சட்டம் படித்து எதிர்காலத்தில் சிறந்த வழக்கறிஞர்களாக வரும் தலைமுறையை அழித்துவிடும். முறையான தகுதி வாய்ந்த பேராசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால் சட்டக்கல்லூரிகளை நடத்தி என்ன பயன். எனவே சட்டக் கல்லூரிகளை இழுத்து மூடிவிடலாமே?. மாணவர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த ஆசிரியர்களையும், கௌரவ விரிவுரையாளர்களையும் நியமித்து பாடம் நடத்த வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் மாணவர்களின் நலன் பாழாகிவிடும். இந்த வழக்கில் சட்டத்துறை செயலாளர் அக்டோபர் 15 ஆம் தேதி ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்து வழக்கை அன்றைய தினத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.