ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி மரியாதை நிகழ்வு நேற்று மதுரையில் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டியில் நடைபெற்றது. முன்னதாக விமான நிலையம் வந்த அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகு வெளியே வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணி வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு மரியாதை செய்த பிறகுதான் பாஜக மற்றும் பிறகட்சி தொண்டர்கள் மரியாதை செய்ய முடியும் என கூறியதால் இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''ஒரு ஆழமான தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய கட்சி பாஜக கட்சி. அப்படி இருக்கும் பொழுது பாஜகவின் தொண்டர்களோ, பொதுமக்களோ இப்படி அமைச்சரின் மீது செய்திருந்தால் நிச்சயமாக நமது தொண்டர்கள், தலைவர்களிடம் பேசி அதுபோல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகின்றோம். அதே நேரத்தில் ஒரு அமைச்சர், பொதுமக்கள், தொண்டர்கள் இங்கு நிற்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்று சொல்கிறார் என்றால் அந்த அமைச்சர் பதவி விலக வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
இதற்கு விளக்கமளித்துள்ள திமுக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராணுவ நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளது. லட்சுமணனின் வீட்டிலோ அல்லது கிராமத்திலேயே அண்ணாமலை அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டுமே தவிர இப்படி செய்திருக்கக் கூடாது. ராணுவ வீரரின் உடலுடன் படம் எடுக்க அண்ணாமலை முற்பட்டார் எனவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.