Skip to main content

தமிழகத்தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள்! -சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம்!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பில்லை எனவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை சார்பில் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CAA issue - Tamilnadu govt explanation in high Court

 



குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்களால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், காவல்துறை அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

போராட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு நியாயமான கட்டுப்பாடுகள் உண்டு எனவும் போராட்டக்காரர்கள் வரம்பை மீறி செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் போராட்டங்கள் நடத்தப்படுவது தேவையற்றது எனவும், சிஏஏ சட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்,  இதுபோன்ற போராட்டங்கள்  சட்டவிரோதமானது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 



தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆ.நடராஜன், குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கோ, பொது மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போராட்டத்தை ஒருங்கிணைக்கும் தலைவர்களோடு காவல்துறை சார்பில் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் 49 இடங்களில் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் மட்டும் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம்  தொடர்பாக  29 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

மனுதாரர்கள் தரப்பு வாதம் முடிவடையாததால்,  வழக்கு விசாரணை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்