கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் 6வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பரங்கிபேட்டை, விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி உள்ளிட்ட பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை கடை வீதியில் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை கடந்த 21தேதி தொடங்கினர். அதில் இருந்து இரவும் பகலும் தங்கியிருந்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில், கொள்ளுமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் தலைமையில் காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.