வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என களத்தில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் துவங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா உட்பட 8 முக்கிய மசோதாக்கள் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் கடந்த 5-ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில், போராட்டத்தின்போது காவலர்களைத் தாக்கியது, வாகனங்களுக்குத் தீவைத்தது தொடர்பான வழக்குகளைத் தவிர, மற்ற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (19.02.2021) தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''மத்தியக் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா (சி.ஏ.ஏ)வை எதிர்த்து போராடியதற்குப் போடப்பட்ட வழக்குகளில், போலீசாரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகளைத் தவிர, மற்ற 1500 வழக்குகள் வாபஸ் பெறப்படும்'' என அறிவித்துள்ளார்.