Skip to main content

இடைத்தேர்தல் நடந்தால் ஆர்.கே.நகரில் நடந்ததைவிட 20 மடங்கு அதிக பண வினியோகம் நடக்கும்! அன்புமணி 

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
rupees



தமிழ்நாட்டில் நிலவும் அனைத்து வகையான குழப்பங்களுக்கும் தீர்வு காணும் வகையில் தமிழக சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும், இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடந்ததைவிட 20 மடங்கு அதிக விதிமீறல்களும், பண வினியோகமும் நடக்கும் என்றும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய, தினகரன் ஆதரவு சட்டப் பேரவை உறுப்பினர்கள் 18 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட்டது  செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருந்த ஆபத்து விலகியிருந்தாலும் தமிழக நலனுக்கு ஆபத்து அதிகரித்திருக்கிறது. இத்தகைய முன்னேற்றங்கள் எதுவுமே தமிழகத்திற்கு நல்லதல்ல.
 

எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை  திரும்பப் பெற்ற தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும் பதவி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதன் மூலம் பேரவையில் ஆளும் தரப்புக்கு பெரும்பான்மை இருப்பது உறுதியாகியுள்ளது.  பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் இருந்தாலோ, மேல்முறையீடு செய்தும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டாலோ அவர்களின் 18 தொகுதிகள், ஏற்கனவே காலியாக உள்ள 2 தொகுதிகள் என 20 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடனோ அல்லது அதற்கு முன்போ இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடையும் பட்சத்தில் எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு கவிழ்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பது உண்மை.

 

தமிழ்நாட்டில் பினாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும் திரும்பப்பெற்று இன்றுடன் 430 நாட்களாகி விட்டன. சுமார் 15 மாதங்களாக தமிழக அரசு  நீடித்ததற்கு முக்கியக் காரணம், பினாமி அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து முடிவெடுப்பதில் ஆளுனர் மாளிகையில் தேவையற்ற தாமதம் செய்யப்பட்டதும், அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிப்பதில் ஏற்பட்ட தாமதமும் தான். இதுவரை குழப்பங்களால் மட்டுமே பதவியில் நீடித்து வந்த பினாமி அரசு, பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக இனிவரும் காலங்களில் நடத்தும் குதிரை பேரங்களும், வாக்கு பேரங்களும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க எந்த வகையிலும் உதவாது.
 

சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்குகளை விலைக்கு வாங்க பணம் வாரி இறைக்கப்பட்டதை ஒட்டுமொத்தம் இந்தியாவும் அறியும். இப்போது 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடந்ததைவிட 20 மடங்கு அதிக விதிமீறல்களும், பண வினியோகமும் நடக்கும். முடிவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும்.
 

மற்றொருபுறம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம்  தரப்பு உறுப்பினர்கள் 11 பேர் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததால் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டால் அப்போதும் அரசு கவிழும் நிலை ஏற்படும். அதை சமாளிப்பதற்காகவும்  குதிரை பேரங்கள் நடத்தப்படக்கூடும். மொத்தத்தில் இப்போதுள்ள அரசு தொடர்ந்தாலும் கூட இனி வரும் காலங்கள் ஆட்சியை தக்கக்வைத்துக் கொள்வதற்கான போராட்டங்களை நடத்துவதற்குத் தான் சரியாக இருக்குமே தவிர, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு நேரமிருக்காது.
 

எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு பொறுப்பேற்றது முதல் இப்போது வரையிலான 21 மாதங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக  எந்தவொரு மக்கள் நலப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இனியும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் இந்த அரசு நீடிப்பதால் யாருக்கு என்ன பயன்? பினாமி அரசு நீடிக்கும் காலங்களில் ஜனநாயகப் படுகொலைகளைத் தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை.
 

எனவே, தமிழ்நாட்டில் நிலவும் அனைத்து வகையான குழப்பங்களுக்கும் தீர்வு காணும் வகையில், தமிழக சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் ஆட்சி அமைந்து தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற இயலும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்