திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த 11 ஆம் தேதி லாரியில் மணல் அள்ளப்பட்டது. அப்போது அந்த இடத்தில் மண்ணச்சநல்லூர் தாசில்தார் ரேணுகா தன்னுடைய வாகனத்தில் அமர்ந்திருந்தார்.
மணல் கடத்தல் நடக்கும் இடத்தில் அவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தட்டிக் கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தாசில்தார் பொதுமக்களை மிரட்டி நீங்கள் எல்லோரும் வெளியேறுங்கள் என்று மிரட்ட ஆரம்பித்தார்.
தாசில்தார் ரேணுகா மிரட்டுவதற்கு காரணம் திருச்சி சமயபுரம் அருகே, தான் கட்டி வரும் வீட்டிற்கு திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தெரிய வந்தது. இதையடுத்து லாரியையும், தாசில்தாரையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். போலீசார் வந்து அவர்களை மீட்டுச் சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதில் தாசில்தார் திருட்டுத் தனமாக மணல் அள்ளியது உறுதியானது. இந்நிலையில் தற்போது ரேணுகாவை டி.என்.பி.எல் தாசில்தாரராக பணியிடம் மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் உதவியாளராக இருந்த ராஜேஸ் கண்ணன் மண்ணச்சநல்லூர் தாசில்தாரராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புகாரில் சிக்கிய ரேணுகாவை காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் சென்னையில் முதல்வருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் சிபாரிசு செய்ததால் பணியிடம் மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் தாசில்தாராக இருந்த தற்போது மணப்பாறைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள மணல் கொள்ளையில் நேரடியாக ஈடுபட்ட ரேணுகா மீது திருட்டு வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி பாசன வாய்க்கால் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுக்கப்பட்டது.
மனு கொடுத்தவர்கள் நம்மிடம் சாதரணமாக மணல் திருடியவர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதியப்படும் என்று கலெக்டர் அறிவித்தார். இப்போது நேரடியாக மக்கள் மூலம் தாசில்தார் மணல் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவரை டிரான்பர் செய்வது சரியா ? அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிய வேண்டும் என்று கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளோம் என்றார்கள்.