Skip to main content

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பி.எஸ்.பி. நோட்டீஸ்

Published on 19/10/2024 | Edited on 19/10/2024
bsp notice to tvk regards flag symbol issue

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை அறிவித்த நிலையில் கட்சிக்கான கொடியை கடந்த ஆகஸ்டில் அறிமுகப்படுத்தினார். கொடியில் மேலும் கீழும் சிவப்பு நிறம் இருக்க நடுவில் மஞ்சள் நிறம் இருந்தது. மஞ்சள் நிற பகுதியில் 2 போர் யானைகளுக்கு நடுவில் வாகை மலர் மற்றும் அந்த மலரைச் சுற்றி  23 பச்சை நிற நட்சத்திரங்களும், 5 வெளிர் நீல நிற நட்சத்திரங்களும் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, த.வெ.க. கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் எனக் கூறி எதிர்பு தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன், “பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை எந்த மாநில கட்சியும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. எனவே, உடனடியாக யானையை கொடியில் இருந்து நீக்க வேண்டும்; இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்பேன்” என்றார்.

இதனை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாருக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், “ஒரு கட்சியினுடைய கொடியையோ அல்லது கொடியில் இடம் பெற்றிருக்கும் சின்னங்களையோ தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது இல்லை. 1950ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட விதிமுறையின்படி, ஒரு நாட்டினுடைய சின்னத்தை தவிர மற்ற சின்னத்தை பயன்படுத்த எந்தவித தடையும் இல்லை. எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறக்கூடிய அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை” எனக் கூறியது. 

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் த.வெ.க. கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வலியுறுத்தி விஜய்க்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் சந்தீப் இந்த நோட்டீஸை கொடுத்துள்ள நிலையில், “இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை தமிழக வெற்றி கழக கொடியில் இருந்து நீக்க வேண்டுமென கட்சி கொடி வெளியிட்ட நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறோம், இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட விதியின்படி இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அரசு ஆணையின்படி ஒரு கட்சி, தங்களுக்கென ஒரு கொடி இருந்தால் அந்த கட்சி கொடியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வழங்கப்பட்ட சின்னத்தை போன்றோ, மற்ற கட்சிகளின் சின்னத்தை போலவோ அல்லது சின்னத்தின் மாற்றுரு போன்றோ தங்கள் கொடியில் சின்னங்கள் அமையாமல் கவனித்து கொள்ள வேண்டியது அக்கட்சியின் தார்மீக பொறுப்பாகும். 

இந்த விதியை மீறுவதாக உள்ளது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபம் தெரிவித்த நிலையில் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் இந்த நோட்டிஸையே சட்ட முறையான அறிவிப்பாக கருதி யானை சின்னத்தை நீக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றோம்” என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்