Skip to main content

நோட்டமிட்டு உள்நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்! அதிர்ச்சியில் ஆழ்ந்த ஈரோடு மண்டல அதிகாரிகள்! 

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

Bribery police who watched and entered! Erode zonal authorities in shock!

 

ஈரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலமாகத்தான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகள், ஏற்கனவே ஈரோடு மாவட்டத்திலிருந்து பிறகு திருப்பூர் மாவட்டம் பிரிப்புக்கு பிறகும் நிர்வாக ரீதியாக செயல்படும் பேரூராட்சிகளான திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகள் என மொத்தம் 57 பேரூராட்சிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 

இதில் சாலை பணிகள், கட்டுமான பணிகள் திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது. பேரூராட்சி பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்க ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்திருக்கிறது. இதை தொடர்ந்து 21 மற்றும் 22ந் தேதி என இரு நாட்களாக அலுவலக நடவடிக்கையை போலீசார் ரகசியமாக கண்காணித்து அதை உறுதிப்படுத்தினார்கள்.

 

ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார், 23ந் தேதி மாலை பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு ஒரு சேர நுழைந்து  திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு பணியில் இருந்த அனைத்து ஊழியர்களின் செல்போன்களையும் பெற்று கொண்ட போலீசார் தங்களது சோதனையை தொடங்கினார்கள். அப்போது பலரின் மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், அனைத்து அதிகாரிகளின் கைப்பைகள், மேஜைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையிட்டனர். அவர்களிடமிகுந்த பணத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. பலர் பணக்கட்டுக்களை தூக்கி வெளியே எறிந்தனர். அதையும் விடாமல் போலீசார் கைப்பற்றினர்.

 

இந்த சோதனையில் கணக்கில் வராத மொத்தம் ரூபாய் 51 லட்சத்து 32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மதியம் 3 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட 51.32 லட்சம் பணத்தை அதிகாரிகள் கொண்டு சென்றனர். 

 

லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி ஈரோடு அலுவலக உதவி செயற்பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர் லீலாவதி, திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் செல்லதுரை, மூலனூர் பேரூராட்சி மின் பணியாளர் செல்வம், ஈரோடு அலுவலக தற்காலிக பணியாளர் வெங்கடேஷ் பிரபு ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் கோவையில் உள்ள உதவி செயற்பொறியாளர் நாகராஜன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்