புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கற்பூரசுந்தரேசுவர பாண்டியன். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இவரது மகன்கள் நிவாஷ் பாண்டி (வயது 6), ரித்திஷ் பாண்டி (வயது 4) ஆகிய இருவருடன் 4 சகோதரர்களுடன் ஒரே குடிசையில் வசித்து வருகிறார். தான் வெளியூர் வேலைக்கு சென்றால் தனது மகன்களை தனது சகோதரர்கள் பாதுகாப்பில் விட்டு செல்வது வழக்கம்.
நேற்று திங்கள் கிழமை கற்பூரசுந்தரேசுவர பாண்டிக்கும் அவரது சகோதரர்களுக்கும் பாகப்பிரிவினை நடந்துள்ளது. அப்போது காரசாரமாகப் பேசிக் கொண்டுள்ளனர். அதன் பிறகு சிறுவர்களைக் காணவில்லை. அவரது ஒரு சகோதரர் குளத்திற்கு குளிக்கச் சென்றதாகவும் தான் குளிக்கச் சென்ற போது பின்னால் வந்த சிறுவர்களை வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு சிறுவர்களைக் காணவில்லை. வீட்டிற்குச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் வீட்டிற்கும் வரவில்லை என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து உள்ளூர் இளைஞர்கள் பல குளங்களில் இறங்கித் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் வீட்டு வாசலில் உள்ள குளத்தில் இளைஞர்கள் தேட வரும் போது நாங்கள் தேடிப் பார்த்துவிட்டோம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.
இந்நிலையில் இன்று செவ்வாய்க் கிழமை மதியம் காணாமல் போன இரு சிறுவர்களும் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் சடலமாக மிதந்தது கண்டு அதிர்ந்த கிராமத்தினர் சிறுவர்களின் சடலங்களை மீட்கப்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறுவர்கள் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். சிறுவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சம்பவம் குறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் விசாரணை செய்து வருகிறார்.
குளக்கரையில் திரண்டிருந்த உறவினர்கள் இதுகுறித்து கூறும் போது.. 'சிறுவர்கள் எப்போதும் குளத்தில் குளிக்கப் போகமாட்டார்கள். கடந்த வாரம் கனமழை பெய்து இவர்கள் குடிசை வழியாக தண்ணீர் சென்று தான் எதிரே உள்ள குளம் நிரம்பியது. அப்போது போகாதவர்கள் இன்று எப்படி போனார்கள் என்பது தெரியவில்லை. மேலும் பாகப்பிரிவினை நடந்து சிறிது நேரத்தில் சிறுவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். கன்னத்தில் கீறல் காயங்களும் தெரிவதால் சிறுவர்களாகக் குளத்தில் தவறி விழுந்தார்களா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமா என்று போலீசார் தான் தீர விசாரிக்க வேண்டும்'' என்றனர்.
போலீசாரோ 'பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்கு பிறகே சிறுவர்கள் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும்' என்கின்றனர்.