புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக தற்போதைய ஆய்வுகள் கூறி வருகிறது. இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், மறமடக்கி, வடகாடு மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்கு சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்தி 100 அடி வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கொத்தமங்கலம் கிழக்கு சங்கரன் குடியிருப்பு பகுதியில் பல வருடங்களாக குடி தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் தனி ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்று பல முறை மாவட்ட ஆட்சியர், மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு நிதியில் இருந்து ஆழ்குழாய் கிணறும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 5.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கொத்தமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒதுக்கி 100 நாள் பணியாளர்களால் சுத்தம் செய்து கொடுக்கப்பட்ட இடத்தில் பல்வேறு நிலத்தடி நீர் சோதனைகளுக்கு பிறகு கொத்தமங்கலம் சங்கரன் குடியிருப்பு பகுதியில் மத்திய அரசு நிதியில் இருந்து ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடங்கி நடந்தது. கிணறு அமைத்த பிறகு இரும்பு குழாய்களும் இறக்கப்பட்டது. அதன் பிறகு கம்பிரசர் மூலம் தண்ணீரை தெளிய வைக்கும் முயற்சி நடந்தபோது ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் வரவில்லை. அதனால் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஆழ்குழாய் கிணற்றில் ஊற்றி கம்பிரசர் ஊதப்பட்டது. இதே போல பல முறை முயற்சி செய்யப்பட்டும் தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். அதனால் இது குடி தண்ணீருக்காக ஆழ்குழாய் அமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் மண் மாதிரிகள் அடிக்கடி ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டதுடன் இறக்கப்பட்ட குழாய்களில் ஓட்டைகள் இல்லாமல் பதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகள் அமைக்க சோதனைக்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துள்ளார்களா என்று பொதுமக்கள் சந்தேகங்களை எழுப்பினார்கள்.
இந்த நிலையில் ஆயிரம் அடி ஆழத்தில் குடி தண்ணீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனதால் அதன் பிறகு எந்த அதிகாரியும் பார்க்க வரவில்லை. அதனால் அந்த ஆழ்குழாய் கிணறு குறித்து திருவரங்குளம் ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பொதுமக்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது என்றும், அரசு ஆயிரம் அடியில் குடி தண்ணீருக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்கவில்லை என்றும் அந்த ஆழ்குழாய் கிணறு அமைத்தது யார், ஒப்பந்தக்காரர்கள் யார் என்பது பற்றி எதுவும் தெரியாது என்று பதில் கொடுத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தண்ணீர் கிடைக்காத ஆழ்குழாய் கிணற்றை உடனே அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பதால் சனிக்கிழமை ஆழ்குழாய் கிணற்றை சுற்றி அமர்ந்து பெண்கள் ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கை குழந்தையுடன் கொளுத்தும் வெயிலில் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்பகுதி மக்கள் கூறும் போது, அதாவது விவசாயத்திற்கு விவசாயிகள் அமைக்கும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு பிளாஸ்டிக் குழாய்கள் இறக்கப்படுவதுடன் சுமார் 200 அடியில் இருந்து ஒன்று மாற்றி ஒரு குழாய் ஓட்டை உள்ள குழாய்களை இறக்குவதுடன் முழுமையாக சரளை கற்களை மட்டுமே நிரப்புவதால் ஊற்றுத் தண்ணீர் தடையின்றி கிடைக்கிறது. ஆனால் தற்போது குடி தண்ணீருக்காக அமைத்துள்ள கிணற்றில் ஓட்டை குழாய்கள் இல்லை. சரளை கற்களுக்கு பதில் மண் கொட்டி மூடியதால் தண்ணீர் ஊற்றும் அடைக்கப்பட்டடுவிட்டது. அதனால்தான் தண்ணீர் வரவில்லை. மேலும் இப்படி குஜராத் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து மத்திய அரசு திட்டமாக இருப்பதால் இது ஒ.என்.ஜி.சியின் சோதனையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அதை தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலக பதில் உறுதி செய்துவிட்டது.
மேலும் இதே போல கூழையன்காடு, கல்லாலங்குடி, தேவர்பட்டி ஆகிய கிராமங்களிலும் ஆழ்குழாய் கிணறு தோல்வியடைந்துள்ளது. அதாவது மத்திய அரசு நிதி ரூ. 2 கோடி வரை வீணடிக்கப்பட்டுள்ளது. அதனால் தண்ணீர் வராத ஆழ்குழாய் கிணற்றை மூடி மாற்று ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொடுக்க வேண்டும். காலங்கடத்தினால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராக உள்ளோம் என்றனர்.