கரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் தினம் தினம் பொதுமக்கள் செத்து பிழைத்து வருகிறார்கள். இந்தநிலையில் தமிழகத்தில் 144 தடை உத்திரவு அமுலில் உள்ளது. மேலும் இந்த உத்தரவு ஏப் 30-வரை நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வேலைக்கு செல்வது இல்லை. மேலும் அவர்கள் ஒவ்வொரு நாளையும் கடத்துவதில் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் அத்தியாவாசிய பொருட்களின் விலை தாறுமாறாக விலை ஏறியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவுக்கு முன்பு இருந்த விலையைவிட தற்போது 30 முதல் 40 சதவீதம் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாதம் சம்பளம் பெறுபவர்கள் சிரமம் இல்லாமல் பொருட்கள் கிடைத்தால் போதும் என்று எவ்வளவு விலை இருந்தாலும் பராயில்லை. என்று வாங்கி கொள்கிறார்கள்.
இது தினக்கூலி தொழிலாளர்களுக்கு கரோனாவைவிட பெரிய இடியாக உள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கையின் மூலம் மட்டும் அத்தியாவாசிய பொருட்களின் விலையை அதிகமாக விற்ககூடாது என்று தெரிவித்து வருகிறார். அதிக விலை விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்தநிலையில் சிதம்பரம் நகரத்தில் பாரம்பரியமாக செயல்பட்டு வந்த மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்துவந்த நூதனம் என்ற கடை தற்போது ஊரடங்கில் 10 பேருக்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ள அனைத்து கடைகளையும் மூடவேண்டும் ஆட்சியர் உத்திரவு பிறப்பித்ததன் பேரில் மூடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்த கடையின் வாடிக்கையாளர்கள் அத்தியாவாசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், விலை ஏற்றம் அதிகம் உள்ளது என்று கடையின் உரிமையாளர் அன்வர்பாட்சாவிடம் புலம்பியுள்ளனர்.
இந்தநிலையில் கடையின் உரிமையாளர் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு விலைஏற்றம் இல்லாமல் 144 தடைக்கு முன் இருந்த விலையிலே அனைத்து அத்தியாவாசிய பொருட்களையும் வீட்டுக்கே கொண்டு போய் கொடுக்கமுடிவு செய்து சிதம்பரம் நகராட்சியுடன் இணைந்து நடமாடும் பல்பொருள் விநியோக வாகனம் மூலம் பொதுமக்களின் வீட்டிற்கே மளிகை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
பொதுமக்களை தேடி பல்பொருள் வாகனத்தை துவக்கிவைக்கும் நிகழ்ச்சி சிதம்பரம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதனை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கலந்துகொண்டு துவக்கிவைத்து பொதுமக்களின் வீட்டிற்கே சென்று மளிகைபொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, காவல்துறை துணைகண்காணிப்பாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு மருந்தாளுநர்கள் சங்க மாநில செயலாளர் வெங்கடசுந்தரம், நூதனம் கடையின் உரிமையாளர் அன்வர்பாட்சா உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் ஊழியர்கள், காவல்துறையினர் கலந்துகொண்டனர்.