லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அதிகாரி கைது
நெல்லை மாவட்டத்தின் மேலநீலிதநல்லூர் யூனியனின் வட்டார வளர்ச்சி அதிகாரியாகக் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றவர் பிச்சுமணி. இந்த யூனியனின் காண்ட்ராக்ட்டர் ஆயாள்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ். இவரிடம் ஒப்பந்தப் பணி ஆணை தருவதற்காக 21 ஆயிரம் லஞ்சம் பெற்றதால் பொன்ராஜின் புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறையின் நெல்லை மாவட்ட டி.எஸ்.பி. மதியழகன் மற்றும் போலீசாரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து பொன்ராஜ் சொல்லுவது:
யூனியனின் ஒப்பந்தக்காரரான எனக்கு மாறுதலாகிச் சென்ற பி.டி.ஒ., பைப்லைன், வாட்டர் தொடர்பான 40 லட்சத்திற்குரிய டெண்டர் கொடுத்திருந்தார். பின்னர் பொறுப்பிற்கு வந்த பி.டி.ஒ.பிச்சுமணி, அந்தத் டெண்டரைக் கேன்சல் செய்த விட்டு புதியதாக வெளியிட்டவர் பணி கிடைப்பதற்கு 5 சதம் லஞ்சம் கேட்டார் என்னால் அவ்வளவு தொகை முடியாது என்றேன். பின் ஒரு வழியாக 3 சதம் கமிசன் பேசி 21 ஆயிரம் வேண்டும் என்றார்.
இந்தப் பணியில் ஈடுபட்ட 7 காண்ட்ராக்டர்களில் 4 பேர்கள் அவருக்குக் கமிசன் கொடுத்து விட்டனர். ஆனால் நான் நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மதியழகனிடம் புகார் செய்தேன். அவரது ஆலோசனைப்படி நேற்று மதியம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, நான், லஞ்சம் கேட்ட பி.டி.ஓ. பிச்சுமணியிடம் அவரது அலுவலகத்தில் வைத்துக் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர் என்கிறார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்ப போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றணர். நெல்லை மாவட்டத்தின் பெரிய யூனியனான மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தின் பி.டி.ஒ. டெண்டருக்காக நான்கு பேர்களிடம் லஞ்சம் பெற்றுக் கைதாகியிருப்பது மாவட்ட அளவில் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.
-செய்தி : படங்கள் : ப.இராம்குமார்