பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும் என்று சமீபத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று (22/11/2021)வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக் கோரி தி.மு.க. அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே.சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, பொது செயலாளர் குணசேகரன், பொருளாளர் தீபக்ராஜா, இளைஞர் அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், மகளிர் அணி மாவட்ட தலைவர்கள் புனிதம்,கோகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"ஏறிப்போச்சு... ஏறிப்போச்சு...பெட்ரோல்... டீசல் ஏறிப்போச்சு...தி.மு.க. அரசே, ஸ்டாலின் அரசே விலையைக் குறை.. விலையைக் குறை... வாட் வரியை குறைத்து விலையைக் குறை..." என சிறிது நேரம் கோஷம் போட்டுவிட்டு கலையத் தொடங்கினார்கள்.
அப்போது பத்திரிகையாளர்கள் சிலர் பா.ஜ.க.மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் "ஏங்க பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை தினமும் நிர்ணயம் செய்வது உங்க மத்திய அரசு அனுமதித்துள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் தான் விலை ஏறாமல் தடுத்து விலை குறைப்பைச் செய்ய வேண்டியது மத்திய பா.ஜ.க. அரசின் கையில் தானே இருக்கிறது.
வரி என்பது எல்லா பொருளுக்கும் உள்ளது. அது மாநில அரசின் வருவாய் சம்பந்தப்பட்டது. வாட் வரியும் அப்படித்தான், இப்படி இருக்க விலையை குறைக்காமல் வரியை குறைக்க வேண்டும் என்பது என்ன அரசியல் போராட்டம் எதுவும் புரியவில்லையே என கேள்வி எழுப்பியதற்கு தான் முதல் வரியில் உள்ள பதிலை அந்த பா.ஜ.க. நிர்வாகி சொல்லிச் சிரித்தார்.