தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்றுமுதல் (12.10.2021) அறிவிக்கப்பட்டுவருகின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போதுவரை நடைபெற்றுவருகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரேயொரு வாக்கை மட்டும் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. கோவையில் பெரியநாயக்கம்பாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த குருடம்பாளையம் ஊராட்சியில் ஒன்பதாவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திக் என்ற வேட்பாளருக்கு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது. வேட்பாளர் கார்த்திக் வீட்டில் குடும்ப உறுப்பினர்களே 6 பேர் உள்ள நிலையில், ஒரு வாக்கை மட்டும் பெற்றது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
ஒரு வாக்கு பெற்றவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் நிற்கவில்லை என்றும் அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ''பாஜகவின் தாமரை சின்னத்தில் நிற்காமல் சுயேச்சையாகப் பலர் நிற்கிறார்கள். அப்படி அவர், அவர் பெயரைப் போட்டு வாக்கு சேகரித்தார். இரண்டாவது அவர் பாஜகவில் ஒரு பொறுப்பில் உள்ளார். நானும் அவருக்கு ஃபோன் பண்ணி ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் சொன்னேன்... 'நீங்க ஒரு வார்டு மெம்பருக்காக நின்னுருக்கீங்க. நன்றிங்க சந்தோஷம்' என்றேன். மக்கள் பணிக்காகத் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை பாஜக விரும்புகிறது. நிச்சயமாக ஒருநாள் தாமரை சின்னத்தில் நிற்க அவருக்குக் கட்சி வாய்ப்பு கொடுக்கும். அவர் உழைப்பு நன்றாக இருந்தால் தாமரை சின்னத்தில் அவர் நிற்பார். நின்று ஜெயித்தும் காட்டுவார்'' என்றார்.