Skip to main content

'சிதறிப் போன கூட்டணியை பாஜக ஒட்ட வைக்க முயல்கிறது' - திருமா பேட்டி

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

'BJP is trying to patch together the shattered alliance' - Thiruma Patti

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன.

 

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கூட்டம் இன்று (18.7.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இன்று மதியம் 12:00 மணிக்குத் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கொடுத்த பரிந்துரையின் பேரில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி (INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) என்பதன் சுருக்கமே (INDIA) இந்தியாவாகும்.

 

NN

 

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ''மனம் திறந்து  அனைவரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். இன்று உம்மன் சாண்டி காலமானதால் 11 மணிக்குத் தொடங்க வேண்டிய கூட்டம் 11:45க்கு தொடங்கியது. ஒரு நிமிடம் அவருக்கு கூட்டு மௌன அஞ்சலி செலுத்திய பின்  கூட்டம் தொடங்கியது. கார்கே கூட்டத்தில் பேசப்பட வேண்டிய கருத்துக்களுக்கான பேசுபடு பொருட்களை முன் வைத்தார். அதனடிப்படையில் 26 தலைவர்களும் கருத்துக்களை சொன்னோம். கடைசியில் கூட்டணிக்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும் என்கின்ற முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டது.

 

மம்தா பானர்ஜி கூட்டணி பெயர் இந்தியா (INDIA ) என்ற பெயரில் வரவேண்டும் என முன்மொழிந்தார். விசிக சார்பில் 'SAVE INDIA ALLIANCE'  அல்லது 'SECULAR INDIA ALLIANCE' என பெயர் பரிந்துரைத்தோம். 'WE FOR INDIA' என்ற பெயரில் கூட்டணிக்கு பெயர் வைக்கலாம் என இடது சாரிகள் முன்வைத்தனர். இப்படி ஒவ்வொருவரும் பெயர் குறித்து கருத்துக்களை முன்வைத்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் மம்தா பானர்ஜி முன்மொழிந்ததை சரி என வழிமொழிந்தார். ராகுல் காந்தியும் அதையே வழி மொழிந்தார். அனைவரும் ஒருங்கிணைந்து கடைசியில்  INDIA - INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE என்று கூட்டணிக்கு பெயர் வைத்தனர். அடுத்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்கள். புதியதாக கட்சிகள் சேருமா எனத் தெரியவில்லை. பாஜக, சிதறிப் போன கூட்டணியை ஒட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்