Skip to main content

எட்டுவழிச்சாலை விவகாரம்: பாஜகவை கண்டித்து சேலத்தில் உண்ணாவிரத போராட்டம்!

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

 


எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த நடுவண் பாஜக அரசைக் கண்டித்து, சேலத்தில் ஒரே நாளில் நான்கு இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

e


சென்னை & சேலம் இடையே புதிதாக எட்டுவழிச்சாலைத் திட்டத்தை பத்தாயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அமைகிறது. இதற்காக இம்மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அதிமுக அரசு ஈடுபட்டது.


இவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலத்தில் பெரும்பகுதி ஆண்டுக்கு இருபோகம் விளைச்சல் தரக்கூடிய விளை நிலங்கள் என்பதால், நிலம் எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் காவல்துறை பலத்துடன், அடக்குமுறைகளைக் கையாண்டு நிலத்தைக் கையகப்படுத்தி முட்டுக்கற்களை அதிகாரிகள் நட்டனர்.


இதற்கிடையே, இத்திட்டத்தை எதிர்த்து ஒரு தரப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 8ல், இத்திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், எட்டுவழிச்சாலையால் விவசாயிகளுக்கு பலன் இல்லை என்றும், திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக சமூக பொருளாதார காரணிகளை ஆய்வு செய்யாதது ஏன் என்றும் வினா எழுப்பி இருந்தது.

 

e


இது ஒருபுறம் இருக்க, கடந்த மே 20ம் தேதி சேலம் வந்த எடப்பாடி ப-ழனிசாமி, எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு 7 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார். அதுதான், மீண்டும் இப்பிரச்னை விசுவரூபம் எடுக்க மூலாதாரமாக மாறிப்போனது. ஆனால் முதலில் இத்திட்டத்தை ஒரு சதவீதம் பேர்தான் எதிர்க்கின்றனர் என்று கடந்த ஆண்டு திருவாய் மலர்ந்திருந்த எடப்பாடி, பின்னர் 11 சதவீதம் பேர் எதிர்ப்பாக கூறினார். இப்போது அதை 7 சதவீதமாக குறைத்திருக்கிறார். இப்படி தன் மனதில் தோன்றிய எண்ணைக் குறிப்பிட்டு, அதுதான் எதிர்ப்பு சதவீதம் என்று விமான நிலையத்தில் நின்றபடியே சொல்லிவிட்டுப் போவது விவசாயிகள் மத்தியில் மேலும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.


கடந்த சில நாள்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நடுவண் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் நடுவண் மற்றும் மாநில அரசுகளுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


நடுவண் அரசின் மேல்முறையீட்டு நடவடிக்கையைக் கண்டித்து, சேலத்தில் உத்தமசோழபுரம், நாழிக்கல்பட்டி, ராமலிங்கபுரம், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் திங்கள் கிழமையன்று (ஜூன் 3) ஒரே நேரத்தில் விவசாயிகள், ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வாயில் கருப்புத்துணி கட்டியும், கருப்புக்கொடி காட்டியும் எதிர்ப்பை பதிவு செய்தனர். தவிர, பல இடங்களில் விவசாயிகள் அவரவர்களின் சொந்த விளை நிலங்களில் இருந்தவாறே கருப்புக்கொடி காட்டி கண்டனம் தெரிவித்தனர். இந்தப் போராட்டங்களில் பெண்கள் பெருமளவில் திரண்டு வந்து கலந்து கொண்டிருந்தனர்.


மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால், சேலம் மாவட்ட விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர். நடுவண் அரசு மேல்முறையீட்டு மனுவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதே போராட்டக் குழுவினரின் மைய நோக்கமாக இருக்கிறது. எனினும், அவர்கள் தமிழகத்தில் எந்த இடத்தில் இயற்கை வளங்கள் பாதிக்கும் திட்டங்களை கொண்டு வந்தாலும் அவற்றை எதிர்க்கும் முடிவையும் சேலம் விவசாயிகள் புதிதாக கையிலெடுத்துள்ளனர்.


இது தொடர்பாக, ஆச்சாங்குட்டப்பட்டியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான குப்பனூர் நாராயணனிடம் பேசினோம்.


''சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கனிம வளங்களை சுரண்டி கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காகவே எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வர பாஜக, அதிமுக அரசுகள் முயற்சிக்கின்றன. எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம் என தமிழ்நாட்டை குறிவைத்தே பாஜக அரசு இத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 


இப்படி இயற்கை வளங்களை சூறையாடினால் தமிழகம் ஒருகாலக்கட்டத்தில் சோமாலியா போல் சோற்றுக்கே கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படும். வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும்தான் எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் எடப்பாடி கூறுகிறார். விவசாயத்தை அழித்து, அதன்மூலம் கிடைக்கக்கூடிய வளர்ச்சியும், நலனும் எங்களுக்கு வேண்டாம் என்றுதானே நாங்கள் போராடுகிறோம். நாங்களே வேண்டாம் என்று சொல்லும்போது யாருடைய நலனுக்காக இத்திட்டத்தை கொண்டு வருகிறார்கள்? 


மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு படுதோல்வியைக் கொடுத்தோம் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, தமிழர்களை பழிவாங்கும் நோக்கில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது. எட்டுவழிச்சாலைத் திட்டம் ஒரு அழிவுத்திட்டம் என்று உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கும் நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. உடனடியாக இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மேல்முறையீட்டு வழக்கை திரும்பப்பெற வேண்டும்,'' என்றார் நாராயணன்.


உத்தமசோழபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றொரு ஒருங்கிணைப்பாளரான மோகனசுந்தரம் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்தும் முன், சமூக பொருளாதார காரணிகளை அலசி ஆராயவில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அப்படி இருக்கும்போது, அதை எதிர்த்து பாஜக அரசு மேல்முறையீடு செய்திருப்பது விவசாய நலன்களை புறக்கணிப்பதாகவே பார்க்கிறோம். இது மன்னராட்சி காலமல்ல. அடுத்து உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களும் வரும் என்பதை அதிமுக, பாஜக அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். 


இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக, பாஜகவை ஓட ஓட விரட்டி அடிப்போம். நானும் ஒரு விவசாயி எனக்கூறும் எடப்பாடி பழனிசாமி, இதுவரை ஒருமுறைகூட விவசாயிகளை அழைத்து நேரடியாக கருத்துக் கேட்காதது ஏன்? சொந்த மாவட்ட விவசாயிகளைக்கூட அவர் நேரில் சந்திக்க மறுப்பது ஏன்? கார்ப்பரேட் முதலாளிகளிடம் வாங்கிய கமிஷனுக்காகவே இந்த திட்டத்தை கொண்டு வர பாஜக துடிக்கிறது. இந்த நாசகார திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோவதோடு, சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றமே சொன்னாலும் இத்திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். எட்டுவழிச்சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த விதமான போராட்டத்திற்கும் தயாராகி விட்டோம்,'' என படபடவென பொறிந்து தள்ளினார்.


இந்நிலையில் நடுவண் அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பு, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


எதற்காக எட்டுவழிச்சாலை? என்ற வினாவுக்கு உரிய பதில் கிடைக்கும்வரை விவசாயிகளின் கிளர்ச்சியை தவிர்க்க இயலாது. நடுவண், மாநில அரசுகள் மவுனம் காப்பதால் எந்த பயனும் இல்லை.
 

சார்ந்த செய்திகள்