பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா மற்றும் 61வது குருபூஜை பசும்பொன்னில் நாளை (31.10.2023) நடைபெற உள்ளது. அதில், தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
அதேபோன்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வருகை தர உள்ளனர். இந்நிலையில் பசும்பொன்னில் ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நுழையத் தடை விதிக்கக் கோரி தென்னிந்திய நேதாஜி மற்றும் தேவர் பேரவை கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில், “இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயருடன் கைகோர்த்து ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள் நேதாஜியை, முத்துராமலிங்க தேவரை வீழ்த்த முயற்சித்ததை மறப்போமா? தேவர் இன துரோகிகள் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பசும்பொன்னுக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை தரக்கூடாது என ஏற்கனவே ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.