தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததை குறித்து கவலை வேண்டாம் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனக்கு ஆறுதல் கூறியதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வருகிறதா? என்ற தனியார் தொலைக்காட்சி ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன் "என்னுடைய நோக்கம் தொலைநோக்கு பார்வை. பாஜகவின் மாநில தலைவராக நிரந்தரமாக இருந்து விட முடியாது. ஏதேனும் ஒரு பொறுப்பில் தான் இருப்பேன் என கூறினார். பாஜக பொறுத்த வரை கூட்டுத்தலைமை தான். இந்த தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள சூழல்கள் சவால்கள் என்னென்ன என்பது தேசிய தலைவருக்கும் தெரியும். அந்த சவால்களை கடந்து நான் எப்படி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதும் பாஜகவின் தலைவர்களுக்கு தெரியும். இன்னும் சொல்ல போனால் சவால்கள், எல்லோருக்கும் வரும். நீங்கள் குஜராத்திலோ, மத்திய பிரதேசத்திலோ தேர்தல் பணியாற்றவில்லை. தமிழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் சவால்களை எதிர்கொள்ளலாம் என அமித்ஷா ஆறுதலான வார்த்தைகளை கூறினார். அதே போன்று பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் ராம்லால் தொடர்பு கொண்டு கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். எந்த விதத்திலும் மனம் தளர வேண்டாம். இன்னும் பலமாக பணியாற்றுங்கள் என ஆறுதல் கூறினார்" என இவ்வாறு தனியார் செய்தித் தொலைக்காட்சியிடம் தமிழிசை தெரிவித்துள்ளார்.