வெள்ளிக்கிழமை இரவு தன்னுடைய அலுவலகம் கீழே நின்றுக்கொண்டிருந்த பாஜக பிரமுகரை கத்தியால் குத்திவிட்டு எஸ்கேப்பாகியிருக்கின்றனர் இரு இளைஞர்கள். தனக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரிடம், "அட்ஜஸ்ட் செய்தால் மார்க் போடுவேன்." எனக்கூறி பாலியல் சேஷ்டை செய்து கர்ப்பமாக்கியதாலே இந்த கத்தி குத்து சம்பவம் நடந்திருக்குமோ? என்கின்ற ரீதியில் விசாரணையை துவங்கியுள்ளனர் காவல்துறையினர்.
கத்திக்குத்துக்கு ஆளான 61 வயதாகும் துரைராஜ் சிவகங்கை ஒன்றியம் மானாகுடியை சேர்ந்தவர். பியூசி வரை மட்டுமே படித்த இவர் சிவகங்கை காந்தி வீதியில் ஜோதிட நிலையத்தினையும், மதுரை முக்கு ரோட்டில் குட்மேனர்ஸ் என்கின்ற நர்சிங் கல்லூரியையும் நடத்தி வந்திருக்கின்றார். மேலும் சிவகங்கை மாவட்டத்தின் பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராகவும் செயலாற்றி வந்துள்ளார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 10ம் தேதி சிவகங்கை நகரக் காவல் நிலையத்திற்கு வந்த சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த ஜெயராணியோ, "சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் பச்சேரி. தொழிலுக்காக சென்னையில் செட்டிலாகிவிட்டோம். எனக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. சொந்த ஊரும், சொந்த மண்ணும் விட்டுப் போகக்கூடாது என்பதற்காக இங்கே பில்லூரை சேர்ந்த குமார் மகளை என் மகன் பாண்டியராஜனுக்கு திருமணம் பேசி முடித்து, கடந்த 11/09/2019 சிவகங்கை சிவன்கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தோம்.
என் மகனும், மருமகளும் சந்தோஷமாகத் தான் இருந்தார்கள். திடிரென மருமகளுக்கு வாந்தி, மயக்கம் தலைச்சுற்றல் வர கண்ணகி நகரிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டி சென்று காண்பித்தோம். அவங்களும் யூரின் டெஸ்ட் எடுத்துப் பார்க்க மருமகள் கர்ப்பம் என்று ரிசல்ட் வந்தது. இப்பத் தானே கல்யாணமே நடந்தது. அதற்குள்ளே எப்படி கர்ப்பமாக முடியும்.? என்ற கேள்வி எழும்ப, வேளச்சேரி தரமணி சாலையிலுள்ள ஸ்கேன் சென்டரில் மருமகளை செக் அப் செய்தோம். அதில் 15 வார கர்ப்பம் என்றும், கரு உண்டானது 24/06/2019 என்றும் வந்தது. அதன் பின் தான் மருமகளை அழைத்துக்கொண்டு சிவகங்கைக்கு வந்து அவர்களுடைய பெற்றோர்களை வைத்துக்கொண்டு விசாரித்தோம். அதன்பின் தான் தெரிந்தது, அதிக மார்க் போடுவதாகக் கூறி ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரமே. அதனால் தான் நானே காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தேன்." என்றார்.
காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து சிவகங்கை மாவட்ட பாஜக-வின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் சிவகுரு துரைராஜை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பிய நிலையில் நேற்று இச்சம்பவம் நடைப்பெற்றிருப்பதால் கத்திகுத்துக்குக் காரணம் பாலியல் சேஷ்டையாக இருக்கலாம் என விசாரணையை துவங்கியுள்ளது நகர காவல்துறை.
"அலுவலகத்திற்கு கீழே உள்ள பெட்டிக்கடையில் பில்லூரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். தட்டிக்கேட்டதால் கத்தியால் குத்தினார்கள்." என அடையாளம் காட்டக்கூடிய பில்லூர் கிராம இளைஞர்களை பற்றி சிவகுரு என்கின்ற துரைராஜ் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்திருப்பதும் பாலியல் விவகாரத்தால் இச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதுகின்றனர் காவல்துறையினர். தற்போது துரைராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் தொடங்கி முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா பட்டியலில் தற்பொழுது லேட்டஸ்டாக இடம் பிடித்திருக்கின்றார் பாஜகவின் சிவகங்கை மாவட்ட தலைவர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு உண்டாகியுள்ளது.