Skip to main content

“இட ஒதுக்கீடு பிடிக்காத கட்சி பாஜக” - திருமாவளவன் பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
BJP is a party that does not like reservation says Thirumavalavan

சிதம்பரம்  நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.  இவர் திங்கள்கிழமை சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிப்படை, கொத்தங்குடி, மீதிகுடி, கோவிலாம்பூண்டி குமாரமங்கலம், பிச்சாவரம்,டி.எஸ். பேட்டை, கனகாரப்பட்டு, உத்தமசோழமங்கலம், கொடிபள்ளம், பின்னத்தூர், தில்லைவிடங்கன், பெரிய மதகு, மடுவாங்கரை, நஞ்சமகத்துவாழ்க்கை, கிள்ளை உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணிக்கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினின் வியூகம் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும். சனாதன சக்திகள் உங்களிடம் வந்து பசப்பு வார்த்தைகள் கூறி பேசுவார்கள் நம்ப வேண்டாம்.  தேசிய அளவில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.  இட ஒதுக்கீட்டை விரும்பாத கட்சி பாஜக. அது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்காது.

அனைத்தையும் அழித்து விடும். ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் எனக் கூறிய விபி சிங் ஆட்சியை கவிழ்த்தது பாஜக தான். எனவே தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கும் மக்கள் நலத்திட்டங்கள் இடையூறு இல்லாமல் ஏழை மக்களுக்கு கிடைக்க தமிழகம், புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். இங்கு பானை சின்னத்திற்கு அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும்” எனப் பேசினார்.

இவருடன் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழகப் பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன், திமுக பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கலையரசன், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், விசிக மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, திமுக கொத்தங்குடி கிளை செயலாளர் வெங்கடேசன், மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

சார்ந்த செய்திகள்