"வாங்க இன்னைக்கு நீங்களா நாங்களான்னு ஒரு கை பாத்துரலாம்" என, ஒருமையில் பேசிக்கொண்டு, பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு, நாற்காலிகளை பறக்கவிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி, கட்சித் தலைமைக்கு கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், கடந்த 7 ஆம் தேதியன்று பாஜக மாவட்ட தலைவர் அருள் தலைமையில், சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கள்ளக்குறிச்சியைச் சுற்றியுள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்திற்கு, முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர். அப்போது, பாலசுந்தரம் மாவட்ட தலைவராக இருந்த காலகட்டத்தில், அவர் நியமித்த நிர்வாகிகளை, புதிதாக மாவட்ட தலைவர் பதவிக்கு வந்த அருள், பல்வேறு நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. அதனால், அருளின் ஆதரவாளர்களுக்கும், பாலசுந்தரத்தின் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பாஜகவின் இரு கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், திடீரென கைகலப்பாக மாறியது. அப்போது, கூட்டத்தில் இருந்த பாஜக நிர்வாகிகள், ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து அடித்துக் கொண்டும், அருகில் இருந்த நாற்காலிகளை எடுத்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அந்த சமயத்தில், அதே மண்டபத்தில் இருந்த பாஜக தொண்டர்களுக்கும், இந்த சம்பவம் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாஜக நிர்வாகிகளை, சமாதானம் செய்தனர். மேலும், இந்த மோதல் சம்பவத்தில், 5 பாஜக தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பாஜக தலைமையில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் நிலையில், தற்போது கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம், தலைமைக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
- சிவாஜி