பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், உரிய முகாந்திரமின்றி அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
கடந்த 2014- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான்காம் தேதி, பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எழுதிய கடிதம், தினமலர் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களில் வெளியானது.
அதில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும்போது, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவிடம், தான் தொலைபேசியில் அழைத்துப் பேசி, மீனவர்களை விடுவிக்க வகை செய்வதாகவும், ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு வெறுமனே கடிதம் மட்டுமே எழுதி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, சுப்பிரமணிய சாமி மற்றும் செய்தி பிரசுரிக்கப்பட்ட இரு நாளிதழ்கள் மீது, தமிழக அரசு சார்பில் கடந்த 2014- ஆம் ஆண்டு இரண்டு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சுப்ரமணிய சாமி சார்பில் கடந்த 2016- ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சுப்பிரமணிய சாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி ராமசாமி, ஏற்கனவே தினமலர் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள், அவதூறு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசாணையை ரத்து செய்துள்ளதாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணிய சாமி மீதான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். முகாந்திரம் இல்லாத விவகாரங்களில், அவதூறு வழக்குகள் தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்த நீதிபதி, இனிமேல் அப்படியான வழக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.