தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துவருவதால், ஞாயிற்றுக்கிழமையில் மெரினாவிற்குத் தடை, ஊட்டி உட்பட குறிப்பிட்ட சில பிரபல சுற்றுலா தலங்களுக்குச் செல்ல இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்துவருகிறது. அதில் ஒன்றாக வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக சார்பில் அனைத்து தினங்களிலும் அதாவது தமிழ்நாடு அரசு தடை விதித்திருக்கும் வார இறுதி நாட்களிலும், பக்தர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று (07.10.2021) தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சென்னை பாரீஸில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “நமது தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சட்டம் என்ன சொல்கிறது என்றால், அந்தந்த கோயில்களில் உள்ள அறங்காவலர்கள்தான் அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டுமே தவிர, புனித ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்திருக்கும் ஸ்டாலினுக்கு அந்த அதிகாரம் கிடையாது. தமிழ்நாடு பாஜக முறையாக தமிழ்நாடு அரசுக்குத் தெரிவித்துள்ளது, நீங்கள் செய்வது சட்டத்திற்கு எதிரானது. சட்டத்திற்கு மட்டுமல்ல எல்லா தர்மத்திற்கும் எதிரானது என்று. சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கூட பாஜக செல்லவிருக்கிறது” என்று பேசினார்.
இந்நிலையில், இன்று அண்ணாமலை மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அப்போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.