தமிழ்நாட்டில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்காக கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்கக் கோரி பாஜகவினர் இன்று (07/10/2021) காலை 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற 12 கோயில்களின் முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜகவைச் சேர்ந்த மகளிர் அணியினர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், தஞ்சை பெரியகோயில் முன் கருப்பு முருகானந்தமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, "இல்லாத கரோனாவைக் காட்டி கோயில்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அனுமதி இல்லை என சொல்வதா? மதத்தை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. தியேட்டர் சென்று படம் பார்க்க உதயநிதி தயாரிப்பு நிறுவனம் சொல்கிறது; அப்போது கரோனா வராதா? திமுகவின் சித்தாந்தத்தை எங்களது பூஜை அறைக்கும், கோயில்களுக்கும் கொண்டு வாராதீர்கள். மத்திய அரசின் வழிகாட்டுதல்களைத் தேவைக்கேற்ப பின்பற்றுகிறார்கள்; பொய் சொல்கிறார்கள்" என்றார்.