தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது குறித்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வெற்றி வாய்ப்புள்ள இடங்களைக் கூட்டணி கட்சிகளிடம் கேட்டுப் பெறுவது, வேட்பாளர்கள் தேர்வு குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் முடிவில் அதிமுகவுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடப்பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜகவில் குழு ஒன்று அமைக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது.