நெய்வேலியில் கடந்த ஆகஸ்ட் மாதம், பிரியாணி கடை நடத்தி வந்த கண்ணன் என்பவரிடம் கடைக்கு வந்த இரண்டு பேர் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரைத் தாக்கிவிட்டு சென்றனர். இதுகுறித்து தெர்மல் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். ஆனால் இந்தப் புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், மறுநாள் அந்த இரண்டு பேரும் மீண்டும் அந்தக் கடைக்கு வந்து கண்ணனிடம் 'காவல்துறையில் என் மீதே புகார் அளித்தாயா' எனக் கூறி கத்தியால் வெட்டத் தொடங்கினர்.
இதில் கண்ணன் காயம் அடைந்த நிலையில், அந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவியது. அதன் பிறகு வேறு வழியின்றி தெர்மல் போலீசார் அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். விக்கி மற்றும் எழில் நிலவன் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மாத இறுதியில் கண்ணன் பிரியாணி கடையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கண்ணனை ஏற்கனவே தாக்கி சிறையில் இருக்கும் விக்கி என்பவர் கூலிப்படை மூலமாக இந்தக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. சிறையில் இருந்தே நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் காவல்துறையில் புகார் அளித்ததற்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விரிவான விசாரணைக்கு விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தனிப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கண்ணன் புகார் அளிக்கப்பட்ட உடனேயே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொலை சம்பவம் தடுக்கப்பட்டு இருக்கும் என்றும், மேலும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள ஓசிஐயு எனப்படும் திட்டமிட்ட நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு போலீசார், கண்ணனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்ததாகவும் அந்த எச்சரிக்கை மீதும் தெர்மல் காவல் நிலைய போலீசார் அலட்சியம் காட்டியதால் தான் இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்தது.
இதனையடுத்து தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதாவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டார். மேலும் இந்தக் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிய வருகிறது.