உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது "தமிழகத்தில் இன்று மட்டும் 102 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 100 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒருவர் அமெரிக்கா சென்று வந்தவர். மற்றொருவரின் விவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக ஏற்கனவே தமிழகத்தில் கரோனா பாதிப்பு 309 ஆக இருந்த நிலையில், தற்போது 411 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் 364 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் கரோனா பரவல் நிலையில் 2 ஆம் கட்டத்தில்தான் உள்ளது. மூன்றாவது நிலையான சமுதாய பரவலுக்குள் வரவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்பும் நபர்கள் தாராளமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளோம். அங்கு சிகிச்சை பெற விரும்புவோர் சிகிச்சை பெறலாம்" என தெரிவித்தார்.