உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 621ல் இருந்து 690 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இன்று 69 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது என்றார். இன்று கரோனா பாதிப்பால் உயிரிழந்த 64 வயது பெண் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.